NCLT பணியாளர் நியமனம்: உச்சநீதிமன்றம் அதிருப்தி



தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தின் (NCLT) பணியாளர் நியமனங்களை மத்திய கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருப்பதற்கு உச்சநீதிமன்றம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

NCLT-யில் பணியாற்றும் ஊழியர்களின் நியமனம் தொடர்பான வழக்கு, தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வில் அக்டோபர் 29-ந் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் மீனாட்சி அரோரா, NCLT-யில் நீதித்துறை உறுப்பினர்களுடன் பணியாற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரையும் நியமிக்கும் பணி தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும், சுமார் 8 ஆண்டுகளாகப் பணியாற்றும் ஊழியர்கள் நவம்பர் 1 அல்லது 2-ந் தேதியில் பணிநீக்கம் செய்யப்படலாம் என்ற அச்சம் இருப்பதாகவும் கூறினார்.

அமைச்சகத்துக்கு முழு அதிகாரமா?

இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த், “கார்ப்பரேட் விவகாரங்கள் அமைச்சகம் இந்தத் தீர்ப்பாயத்தை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புகிறது. இதுதான் மிகவும் துரதிர்ஷ்டவசமானது” என்றார்.

NCLT பணியாளர்களை நியமிக்கும் முழு அதிகாரமும் அதன் தலைவரிடமே இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தேவைப்பட்டால் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) அல்லது பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலமாக நியமனங்களை மேற்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

நீதிபதி ஜோய்மால்யா பாக்சி கூறுகையில், “பணியாளர் தேர்வு நடைமுறையைத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கலாம். ஆனால் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் அமைப்பாகத் தீர்ப்பாயமே தொடர வேண்டும்” என்றார்.

பணிநீக்கத்துக்குத் தடை விதிக்க மறுப்பு

இதனிடையே, NCLT தலைவரின் அனுமதியின்றி ஊழியர்களைப் பணிநீக்கம் செய்யக் கூடாது என்று மனுதாரர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

ஆனால் இந்தக் கோரிக்கையை ஏற்க தலைமை நீதிபதி மறுத்தார்.

முறையான நியமன நடைமுறைகளைப் பின்பற்றாமல் ஒப்பந்த ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்வதிலும் நீதிமன்றம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

ஊழியர்களின் தனிப்பட்ட நலனுக்காக இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்றும், NCLT-யின் சுதந்திரமான செயல்பாட்டைப் பாதுகாக்கும் பரந்த நோக்கத்தில் இந்த விவகாரத்தைப் பரிசீலிப்பதாகவும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

இது தொடர்பாக நோட்டீஸ் பிறப்பிக்கப்படுவதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர்

கருத்துகள்