விசாரணை முறையாக நடத்தப்படவில்லை
எனில்.. சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை: குற்ற வழக்கில் விசாரணை முறையாக நடத்தப்படவில்லை என்பது தெரியவந்தால், இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகும் கூட அவ்வழக்கின் விசாரணையை வேறு விசாரணை அமைப்புக்கு மாற்ற உத்தரவிட முடியும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் தனது கையொப்பத்தை போலியாகப் போட்டு, தனது பெயரில் இருந்த 4,500 பங்குகளை மூன்றாம் நபருக்கு மாற்றியதாகவும், நிறுவனத்தின் இயக்குநர் பதவியில் இருந்து தன்னை நீக்கியதாகவும் பெண் ஒருவர் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் போலீஸார் தாக்கல் செய்த இறுதி அறிக்கையை ரத்து செய்து, விசாரணையை சிபிசிஐடி அல்லது சிறப்பு விசாரணை அமைப்புக்கு மாற்றக் கோரி மனுதாரர் பி. யூதே சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு (CRL OP No 18981 of 2025) தாக்கல் செய்திருந்தார்.
நிறுவனத்தின் முக்கிய ஆவணங்கள், மின்னஞ்சல் தகவல் தொடர்புகள், இயக்குநர் குழு கூட்டக் குறிப்புகள், பங்குப் பரிமாற்ற பதிவேடுகள் ஆகியவற்றை விசாரணை அதிகாரி முறையாக சேகரிக்கவில்லை என்றும், தன் பெயரிலான போலி ராஜினாமா கடிதத்தின் உண்மைத்தன்மையை ஆய்வு செய்யாமல் குற்றவாளிகளைக் காப்பாற்றும் நோக்கில் அவசரமாக இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அதேநேரம், விசாரணை முடிக்கப்பட்டு இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால், வழக்கை வேறு முகமைக்கு மாற்ற முடியாது என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதி எஸ். அல்லி, விசாரணை என்பது ஒரு வழக்கின் அடிப்படை என்றும், அந்த விசாரணையே பாரபட்சமாகவும் களங்கப்பட்டதாகவும் இருக்கும்போது, அதனடிப்படையில் தாக்கல் செய்யப்படும் குற்றப்பத்திரிகையும் சட்டப்படி செல்லாது என்றும் தெரிவித்தார்.
மேலும் தனது கருத்துக்களில், "நீதியை நிலைநாட்டவும், குற்றவியல் நீதியில் தவறு நிகழ்வதைத் தடுக்கவும் விதிவிலக்கான சூழ்நிலைகளில், இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகும் கூட மறு விசாரணைக்கு அல்லது புதிய விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிடலாம் என உச்ச நீதிமன்றமும் இந்த நீதிமன்றமும் ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளன. பாரபட்சமான குற்றப்பத்திரிகை அரசியலமைப்புச் சட்டம் 20 மற்றும் 21 ஆகிய பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுகிறது. நியாயமான விசாரணை என்பது நியாயமான நீதித்துறை விசாரணைக்கு இன்றியமையாதது" என்று நீதிபதி எஸ். அல்லி குறிப்பிட்டார்.
விசாரணை முறையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள குறைபாடுகள் வழக்கில் உள்ள குற்றச்சாட்டுகளின் ஆழத்தை பாதிக்கும் வகையில் உள்ளதால், விசாரணை வெளிப்படையாகவும் நியாயமாகவும் நடத்தப்படவில்லை என்று குறிப்பிட்ட நீதிமன்றம், போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்து உத்தரவிட்டது.
வழக்கின் விசாரணையை சிபிசிஐடி பிரிவுக்கு மாற்ற உத்தரவிட்ட நீதிமன்றம், ஊடகம், அரசியல் அல்லது உள்ளூர் அழுத்தங்கள் ஏதுமின்றி சுதந்திரமாகவும் நேர்மையாகவும் புதிய விசாரணை நடத்த ஏதுவாக, வழக்கின் அனைத்து ஆவணங்களையும் சிபிசிஐடி வசம் ஒப்படைக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டது.
இவ்வழக்கில் மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் வி. சுப்பிரமணியன், எதிர்மனுதாரர்கள் சார்பில் கூடுதல் அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஆர். எஸ். இந்திரா மற்றும் வழக்கறிஞர் வி. ஸ்ரீமதி ஆகியோர் ஆஜராகினர்.


கருத்துகள்
கருத்துரையிடுக